(காரைதீவு நிருபர் சகா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக்கந்தன் ஆலயம் மற்றும் உகந்தைமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா இன்று(21) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.கொடியேற்றம் இடம்பெற்று 15நாள் திருவிழாவின் பின்னர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் ஆடிவேல்விழா நிறைவடையவுள்ளது.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆலயங்களின் திருவிழா பக்தர்களின் வருகை என்பன மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ஆலயங்களின் தலைவர்கள் ஏலவே கூறியுள்ளனர்.
கதிர்காம ஆடிவேல்விழா உற்சவத்தின்போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.
உகந்தைமலை முருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இவ்வருட கொடியேற்றத்திருவிழா இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
உகந்தைமலை முருகனாலய வண்ணக்கர் ஜே.எஸ்.டி.எம்.சுதுநிலமே திசாநாயக்க(சுதா) கூறுகையில்:
"இம்முறை ஆடிவேல்விழா உற்சவம் குறைந்தளவு பக்தர்களுடன் அதாவது தினமொன்றுக்கு 200 பக்தர்களுடன் நடாத்த ஆரம்பக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்னதானம் பாதயாத்திரை என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.
பகல் திருவிழா காலை 7மணி முதலும் இரவுத்திருவிழா மாலை 5மணி முதலும் நடைபெறவுள்ளன. திருவிழா உபயகாரர்கள் 50 பேரளவில் இரவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். திருவிழாக்காலங்களில் ஏனைய பக்தர்கள் இரவில் தங்க அனுமதியில்லை. பக்தர்கள் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறேன்" என்றார்.