காலிமுகத்திடலில் அடையாளம் தெரியாத சிலரால் தான் துன்புறுத்தப்பட்டதாக ரஷ்ய நாட்டுப் பெண்ணொருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தானும் நண்பரும் தாக்கப்பட்டமை தொடர்பாக முகநூலில் அவர் இது தொடர்பான வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
காலிமுகத்திடலில் நேற்று மாலை மூன்று நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தவேளை பத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தன்னை துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மதுபோதையிலிருந்த ஒருவர் தகாதவார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டதுடன் தனது நண்பரை தாக்கினார். அந்த சம்பவத்தை தான் படம்பிடிக்க ஆரம்பித்த பின்னரே அவர்கள் அங்கிருந்து சென்றனர் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சம்பவம் நடந்து 20 நிமிடங்களுக்கு பின்னரே பொலிஸார் அங்கு வந்தனர் என்றும் இது குறித்து அவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துன்புறுத்தலில் ஈடுபட்ட முக்கிய நபரின் படத்தை வெளியிட்டுள்ள அந்த பெண் அவரை கைதுசெய்வதற்கு பொதுமக்கள் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை சுற்றுலாப் பயணிகள் துன்புறுத்தப்படுவதை சகித்துக்கொள்ளப் போவதில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் கிடைத்துள்ள தகவல்கள் உண்யைமானவை என்பது உறுதியானவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு காலிமுகத்திடலில் வெளிநாட்டு பெண்ணொருவரை துன்புறுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “வெளிநாட்டு உள்நாட்டு பெண்களை இலங்கையில் துஸ்பிரயோகம் செய்வது பரந்துபட்ட அளவில் கண்டிக்கப்படவேண்டிய விடயம். காலிமுகத்திடலில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளை துன்புறுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறு நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.