சவூதியிலுள்ள தந்தையிடம் ஓன்லைனில் மன்னிப்புக்கேட்டு உயிரிழந்த இளம் குடும்ப யுவதி- செங்கலடியில் சோக சம்பவம்


(ஷமி மண்டூர்)
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த மேனுஜன் சலோமியா (19) என்பவர் தீப்பெட்டி கொண்டு அடுப்பை பற்ற வைக்க, முயற்சிக்கையில் திடீரென ஆடையில் தீப்பிடித்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்
பதிவுத்திருமணம் செய்து கொண்டு தளவாயில் வசித்து வந்த இவர்கள் கடந்த ஒரு மாதமாக குமாரவேலியார் கிராமம், செங்கலடியில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்று வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்த யுவதியின் தந்தை சவூதி அரேபியாவில் தொழில் செய்து வருகிறார். சென்ற 11-09-2020 வெள்ளிக்கிழமை, சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தவறுதலாக இவர் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதால், ஆடைகளும் ஈரமாகியுள்ளது.

அதனைப்பெரிது படுத்தாது வேலைகளைத் தொடர்ந்ததும், ஆடைகளை மாற்றி வேறு ஆடை உடுத்திட்டு வா என யுவதியின் கணவர் சொன்ன போது, தேவையில்லை. ஈரம் காய்ந்து விட்டது. அவசரமாக சமைத்து முடிப்போம் என தீப்பெட்டி கொண்டு அடுப்பை பற்ற வைக்க முயற்சிக்கையில் திடீரென ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(16) மாலை மரணமானார்.

தீக்காயங்ளுக்குள்ளான நிலையில் பெற்றோரைச் சந்திக்க வேண்டுமென்றும், அவர்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டுமென்றும் கோரினார். தகவல் கிடைத்தும் வைத்தியசாலைக்குச் சென்ற தாயிடம் மன்னிப்புக்கேட்டதோடு, சவூதியிலிருக்கும் தந்தையிடம் ஒன்லைன் மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இறுதியில் தாயின் அருகாமையில் தான் உயிர் பிரிந்துள்ளார்.

நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்