மட்டக்களப்பில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீவிர நடவடிக்கை


(சிஹாரா லத்தீப்)
ஜனாதிபதியின் அறிவுறுத்தலில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கமைய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மாவட்ட மட்டத்தில்  தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய இம்மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த இன்று (15) மாவட்ட செயலணியொன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த மாவட்ட செயலணியில் வைத்திய நிபுணர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள், பொலிஸ், சிறைச்சாலை, கலால் மற்றும் அரச திணைக்களங்களின் உயரதிகாரிகளும் இணைக்கப்பட்டுள்ளனர்.  .
இந்த செயலணியின் செயல்பாடுகளை வலுவூட்ட பிரதேச செயலாளர்கள் தலைமையில் பிரதேச போதைப்பொருள் தடுப்பு குழுக்கள் நிறுவப்பட்டு பிரதேச பொதுமக்களின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் தடுப்பு பணிகளில் ஈடுபாடு காட்டுவததெனவும் இங்கு முடிவெடுக்கப்பட்டது.

இன்றைய மாவட்டசெயலணியின் அங்குராப்பண நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர் ஜி.விஜயதர்சன், உட்பட பல்வேறு அரச நிறுவனங்கள், தொண்டார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தார்.

இங்கு அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா இங்கு கருத்து வெளியிடுகையில்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள அரசாங்கம் கூடிய அக்கறை காட்டுவதால் மாவட்டத்தின் புத்திஜீவிகள், பொலிஸ் மற்றும் தொண்டார்வ நிறுவனங்கள், பொதுமக்கள் சகலரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் இதேவேளை இங்கு சிறைச்சாலைஅதிகாரிகள் கருத்து வெளியிடுகையில் ஹெரோயின் போதைவஸ்தில் 106 பேரும், கஞ்சா போதைப்பொருளில் 45 பேரும், ஐஸ் போதைப்பொருளில் 62 பேரும் நீதிமன்ற நடவடிக்கையில் சிறைவாசம் அனுபவித்து வருவதாக தெரிவித்தனர்.

அத்துடன் கலால் திணைக்களம் மாவட்டத்தில் இவ்வருடம் முதல் கஞ்சா போதைப்போருளில் மாவடிவேம்பு, நாவலடி, ஜெயந்திபுரம் , வட்டவான் பகுதிகளில் ஏழு பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் இங்கு தகவல் வெளியிடுகையில் இவ்வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரை கஞ்சா போதைப்பொருளில் 28, கொக்கொயின் போதைப்பொருளில் 04    சட்டவிரோத மதுபானம் அருந்திய  01வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.