பூஜைக்காக வாழையிலை வெட்ட தோட்டத்துக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு


அக்கரப்பத்தனைப் பகுதியில் மிருகங்கள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்ட சட்ட விரோத மின்னிணைப்பில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்ராசி நிவ் போட்மோர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் காளி கிட்னம்மாள் (வயது-65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் பூஜைக்காக வாழையிலை வெட்ட தோட்டத்துக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வராதமையால் வீட்டிலுள்ளவர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்தமை தெரியவந்தது.

அதன் பின்னர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்குண்டு அவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.