கொரோனா தொற்றுநோயை தடுக்க பாண்டிருப்பு பகுதியில் சுவ தாரணி ஆயுள்வேத மருந்து வழங்கிவைப்பு

(பாறுக் ஷிஹான்)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்திய சாலைகள் சமூக சுகாதார ராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றன.

இந்த வேலை திட்டத்தின் ஒரு கட்டமாக நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினால் பாரம்பரிய ஆயுள்வேத முறைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் 'சுவ தாரணி' ஆயுர்வேத பானம் இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(20) பாண்டிருப்பு 1 C பல்தேவை கட்டடத்தில் நடைபெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் மற்றும் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர், நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கிழக்கு மாகாண தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம், ஆகியோர் அதிதியாக கலந்து கொண்டு ஒரு தொகுதி மருந்துகளை பாண்டிருப்பு பிரதேசத்திலுள்ள பொதுமக்கள், அரச சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு இந்த 'சுவ தாரணி' நோய் எதிர்ப்பு சக்தி பானங்களை வழங்கி வைத்தனர்.

இதன் போது பிரதேசத்திலுள்ள பொதுமக்களுக்கு 'சுவ தாரணி' நோய் எதிர்ப்பு சக்தி பானத்தை அருந்தும் முறைகள் பற்றி வைத்தியர் கே.எல்.எம். நக்பர் தெளிவுபடுத்தினார் .