ஆசிரியர்களுக்கு covid-19 நோயெதிர்ப்பு மருந்துப் பொதிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் !

(பைஷல் இஸ்மாயில்)
கொரோனா தடுப்புக்கான செயலணியின் பரிந்துரைகளுக்கு அமைவாக நீண்டகால திட்டமிடல்களுடன் பாடசாலைகள் மூன்றாம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா நோய்த் தொற்றுக் கிருமியை எதிர்கொள்ளும் Safoof Josand (Anti Viral Choorana) யூனானி மருந்துப் பொதிகள் வழங்கி வைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபிலினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையை இன்று(25) அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நுார் மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கு கொரோனா நோய்த் தொற்றுக் கிருமி எதிர்கொள்ளும் Safoof Josand (Anti Viral Choorana) யூனானி மருந்துப் பொதிகளை பாடசாலையின் அதிபர் ஏ.முஹம்மட் அஸ்மியிடம் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபில் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தல ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.பி.எம்.றஜீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சமூகநல வைத்தியர் எம்.ரீ.அமீரா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சாரின் பணிப்புரைக்கமைவாக சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனின் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் மருந்து உற்பத்திப் பிரிவில் விஷேடமாக தயாரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.