கவிஞர் மேராவுக்கு சிறந்த ஆய்வு நூலுக்கான துரைவி விருது

 


2020 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த ஆய்வு நூலுக்கான துரைவி விருதினை கவிஞர் மேரா என கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களால் அறியப்பட்ட திரு.தம்பிப்பிள்ளை மேகராசாவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இவரது ‘பின்காலனித்துவ நோக்கில் ஈழத்துத் தமிழ்க்கவிதைகள்’ என்ற நூலுக்கே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஈழத்தின் பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில் சூம் செயலியினூடான 28.02.2021 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. 

கவிஞர் மேரா மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள அரசடித்தீவு என்ற கிராமத்தில் பிறந்து அங்கேயே உயர்தரம் வரைக் கல்வி பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர். கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சிறப்பு இளங்கலைமாணி, முதுதத்துவமாணி பட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அதே பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தினையும் மேற்கொண்டு வருகின்றார். 

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கலை, இலக்கியச் செயற்பாட்டாளராக உள்ள இவர், மரபு இலக்கியம், நவீன இலக்கியம், ஈழத்து இலக்கியம், நாட்டாரியல் முதலான துறைகள் சார்ந்து சர்வதேச, தேசிய மட்டங்களில் நிகழ்ந்த ஆய்வரங்குகளில் பல ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதோடு ஆய்விதழ்களிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

‘கலங்கிய வானம்’(2005), ‘காலத்தின் காயங்கள்’(2007), ‘மனக்காடு’(2011), ‘கொல்லப்பட்ட எங்களது வாக்குமூலங்கள்’(2020) ஆகிய கவிதைத் தொகுதிகளையும் ‘மனமாற்றம்’(2019) என்ற சிறுகதைத் தொகுப்பினையும் ‘பாடி மகிழ்வோம்’(2019) என்ற சிறுவர் பாடல் நூலினையும் ‘சிலப்பதிகாரப் பாத்திரங்களும் கண்ணகி வழக்குரைப் பாத்திரங்களும் - ஒப்பியலாய்வு’(2015), ‘உள்ளிருந்து வெளியே’(2016), ‘பின்காலனித்துவ நோக்கில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’(2020), ‘சங்க இலக்கியம்: சில பார்வைகள்’(2020) ஆகிய ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். ‘பேராசிரியர் செ.யோகராசாவின் முன்னுரைகளினூடாக: ஈழத்து நவீன இலக்கியங்கள் -  படைப்பாளர்கள் - தடங்கள்’(2019) என்ற நூலின் பதிப்பாசிரியராகவும் உள்ள இவர்; கலை, இலக்கிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்குகின்றார்.

இவரது “பாடி மகிழ்வோம்” என்ற நூல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுவர் இலக்கியமாகத் தெரிவுசெய்யப்பட்டு பரிசில் பெற்றது. பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவராக விளங்கும் இவர் 30 இற்கு மேற்பட்ட கவியரங்குகளில் பங்குபற்றியுள்ளார். இவரது 10 இற்கு மேற்பட்ட மெல்லிசைப்பாடல்கள் இசையமைக்கப்பட்டு வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.