துப்பாக்கிசூட்டு படுகொலை : டிப்பர் சாரதியுடன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கமே படுகொலையில் முடிந்துள்ளது


இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மட்டக்களப்பு சின்னஊறணி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

மணல் லொறியொன்றின் சாரதியே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறிய பொலிஸ் பேச்சாளர், சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

  சின்ன ஊரணியை சேர்ந்த 35 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார் . 



மூன்று நாட்களுக்கு முன்னதாக டிப்பர் சாரதியுடன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலனாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

குறித்த டிப்பர் சாரதி, முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர், துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.