கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற ஒரே வழி இதுதான்!



கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற தடுப்பூசியே தீர்க்கமான வழி என்றும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் ஊடாகவே இந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமூக மருத்துவப் பேராசிரியர் மஞ்சு வீரசிங்க கூறியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றலுக்கு எதிராக ஒரு சிலர் வர்த்தக நோக்கங்களுக்காக பரப்பி வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாறாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன்னும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் மஞ்சு வீரசிங்க வேண்டிக்கொள்கின்றார்.

தடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒருசிலர் கூறும் கருத்துக்களுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லையெனச் சுட்டிக்காட்டும் பேராசிரியர், விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத அவ்வாறான தவறான கதைகளுக்கு ஏமாறாமல் புத்திசாதுரியமாக நடந்து கொள்வதன் மூலம் நபர்களையும் அதேபோல் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்பதையும் தெரிவிக்கின்றார்.

கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் பல்வேறு தளங்கள் மூலமாக பரப்பப்பட்டு வரும் தவறான கருத்துக்களை விஞ்ஞான ரீதியாக பரிசீலனை செய்வதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊடகக் கலந்துரையாடலில் பேராசிரியர் இதனைக் குறிப்பிட்டுக் கூறினார்.

நேற்றைய (27) கலந்துரையாடல் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதால் கொவிட் 19 உயிரிழப்பு வீதத்தைக் குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. அதனால் இளைஞர்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்க வேண்டாம் எனவும், மருத்துவ முறைகளைப் பரப்புகின்ற போர்வையில் தவறான கருத்துக்களைப் பரப்புவர்களிடம் வீரசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

26 ஆம் திகதி வரைக்கும் 12 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி இரண்டு கட்டங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் 2.2 மில்லியன் பேருக்கு மாத்திரமே இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்க வேண்டியும் உள்ளது. இலங்கையில் மட்டுமன்றி முழு உலகிலுமே கொவிட் 19 கட்டுப்பாட்டுக்குள்ள சிறந்த தீர்வு தடுப்பூசியாகும்.

பேராசிரியர் சுட்டிக்காட்டிய வகையில், தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசி தொடர்பான சட்டம் முதன்முதலாக 1853 ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டது. அது சின்னமுத்து நோய்க்கானதாகும். மேலும் 170 வருடகாலமாக தடுப்பூசி ஏற்றலுக்கு எதிரான தரப்பினர்கள் ஒரே விதமான தர்க்கங்களையே முன்வைக்கின்றனர். குறித்த தடுப்பூசியால் பயனில்லை எனவும், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பதார்த்தங்கள் இருக்கலாம் எனவும் மற்றும் மேற்கத்தேய மருத்துவ விஞ்ஞானத்தின் ஏகபோகவாதத்தை நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது போன்ற கருத்துக்கள் அவற்றில் சிலவாகும்.

1885 ஆம் ஆண்டில் நீர்வெறுப்பு நோய்க்கும், 1920 ஆம் ஆண்டில் தொண்டை அழற்சி நோய்க்கும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மேலும் 1949 - 1955 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்குவதால் பல்வேறு நோய்களை குறைந்த மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு முடிந்தமையால் தொற்று நோய்களுக்கு முக்கிய சிகிச்சையாகவும், தீர்மானம் மிக்க காரணியாகவும் காணப்படுவது தடுப்பூசியே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு வீதம் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கும் தடுப்பூசி ஏதுவாக அமைந்தமையை கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஹோமாகம மூன்றாம் நிலை கொவிட் 19 சிகிச்சை மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் எரங்க நாரங்கொட குறிப்பிட்டுக் கூறினார்.

இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு, ஒருமாத காலத்தின் பின்னரே நோய் எதிர்ப்புச்சக்தி முழுமையாக ஏற்படுமெனவும் கூறினார். குறித்த காலத்தை பூர்த்தி செய்யாவிட்டால் தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும், சிகிச்சை பலனளிக்காமல் மோசமான நிலைமைக்கோ அல்லது உயிரிழப்போ ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. தடுப்பூசி வகைகளுக்கு ஏற்ப அதிக நோய் எதிர்ப்புக் கிடைப்பதாக, பொதுமக்கள் மத்தியில் காணப்படும் எண்ணங்கள் பொய்யானவை எனவும், உலக சுகாதார தாபனம் அங்கீகரித்துள்ள 8 தடுப்பூசி வகைகளும் ஒரே சமமான நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதாகவும் மருத்துவர் தெளிவுபடுத்திக் கூறினார்.

பைசர் தடுப்பூசி 12 வயது தொடக்கம் 18 வயது வரையான பிள்ளைகளுக்கு மாத்திரமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எந்தவொரு தடுப்பூசியின் மூலமும் ஒரே சமமான நோய் எதிர்ப்பு சக்தியே கிடைக்கின்றது.

இலங்கை தெற்காசிய நாடுகளில் சிசுமரணம் குறைவான நாடாக காணப்படுவதற்கான காரணமாக அமைவது, குறிப்பிட்ட காலங்களில் பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்குவதாலேயாகும் என குடும்ப சுகாதாரப் பணியகத்தின் பணிப்பாளர், சமுதாய மருத்து விசேட நிபுணர் திருமதி. சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுக் கூறினார்.

1961 ஆம் ஆண்டில் பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் ஆரம்பித்தாலும், நாடுபூராகவும் 1978 ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது. பிள்ளைகளுக்குக் காலத்திற்குக் காலம் நோய்த்தொற்று ஏற்படுவதற்குள்ள சந்தர்ப்பங்களை ஆராய்ந்து அவற்றுக்குக் குறித்த காலத்தில் தடுப்பூசி வழங்குகின்றமையால், சிசு மரணத்தைக் குறைத்துக் கொள்வதற்கு இயலுமை கிட்டியுள்ளமையாலும், கொவிட் 19 தடுப்பூசி 12 வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு உலக சுகாதார தாபனம் அங்கீகரிக்கவில்லை எனவும் விசேட நிபுணத்துவ மருத்துவர் சுட்டிக்காட்டினார்.