தற்போதைய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்படலாம்!



முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு பின்னர் நீக்கப்படவிருந்த சில கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒக்டோபர் முதலாம் முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் ஒக்டோபர் மாதத்தில் பின்பற்ற வேண்டிய இரண்டு கட்டங்களின் கீழான புதிய வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது.

முதல் கட்டத்தின் கீழ் ஒக்டோபர் 1 முதல் 15 வரையும் இரண்டாவது கட்டத்தின் கீழ் ஒக்டோபர் 16 முதல் 31 வரையும் மக்களின் நடத்தைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை நீடிக்க அல்லது நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஒக்டோபர் 16 முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள், பொது இடங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் ஒப்பிடும்போது திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் உணவகங்கள், கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள் போன்றவற்றுக்கு ஓரளவு தளர்வு அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஊரடங்கு உத்தரவை தளர்த்திய பின்னர் மக்களின் பொறுப்பற்ற நடத்தையை கருத்தில் கொண்டு, சுகாதார அதிகாரிகள் நிலைமையை ஆராய்ந்து சில கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் மக்கள் சுகாதார விதிகளை புறக்கணித்து நடந்தால் அது மற்றொரு அலையை ஏற்படுத்தும் என்றும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.