7 பேரின் உயிரிழப்புக்குப் பின்னர் குறிஞ்சாக்கேணி - கிண்ணியாவிற்கு இடையில் பேருந்து சேவை!



குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்ததை அடுத்து, இன்று (புதன்கிழமை) முதல் இந்த பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அதன்படி, காக்காமுனையில் இருந்து நடுத்தீவு, குறிஞ்சாக்கேணி ஊடாக கிண்ணியாவுக்கு பேருந்துச் சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பால விபத்தில் பல மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இப்பகுதியில், பழைய பாலத்திற்குப் பதிலாக களப்பு பகுதியில் புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, பீப்பாய்கள் மற்றும் பலகை என்பனவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள குறித்த மிதப்பு பாலத்தின் இரு பகுதிகளும் கம்பிகளின் ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேச மக்கள் தமது அன்றாட பயண நடவடிக்கைகளுக்கு குறித்த மிதப்பு பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், குறித்த மிதப்பு பாலத்தின் ஒரு கம்பி அறுந்தமையால், இந்த விபத்து நேர்ந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.