கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் சுற்றாடல் சார் செயற்பாட்டை மேம்படுத்துவது தொடர்பாக ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை



(சித்தா)

மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி-புள்ளநாயகம் அவர்களின் வழிகாட்டல், ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ச.பார்த்தீபன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் சுற்றாடல் சார் செயற்பாட்டை மேம்படுத்துவது தொடர்பாக ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் திருகோணமலை விக்ணேஸ்வரா வித்தியாலயத்தில் சிங்களமொழி மூலமான ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இப் பயிற்சிப் பட்டறையில் கிழக்கு மாகாணத்தின் சகல வலயங்களையும் சேர்ந்த சிங்களமொழி மூலமான 30 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இப் பயிற்சிப்பட்டறையின் போது மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்கள் கலந்து கொண்டு அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடிய, சமநிலையான ஆளுமையுடைய ஒருவரிடத்தில் பல்வேறு தேரச்சிகள் விருத்தியடைதல் அவசியமாகும். இதற்கு சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பெரிதும் பங்களிப்பச் செய்கின்றன எனக் குறிப்பிட்டதுடன் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளில் காணப்படுகின்ற ஆரம்ப விஞ்ஞானம் சார்ந்த செயற்பாடுகளை ஆசிரியர்கள் முன்னெடுப்பது குறைவாகக் காணப்படுவதால் மாணவர்கள் எதிர்காலத்தில் தனது சுற்றுப்புறத்தின்மீது ஆர்வங் கொண்டு கிரமமாக அச்சுற்றாடலுடன் வெற்றிகரமாக இடைத்தாக்கம் புரிவதற்கு அவசியமான தேர்ச்சிகளை அடையத் தவறுகின்றார்கள். அதனை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யவேண்டிய தேவை ஒவ்வொருக்கும் உண்டு. எனவே தான் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்குத் தேவையான விடயங்களையிட்டு அதுபற்றிக் கலந்துரையாடி இவ்வாறான பயிற்சிப் பட்டறைகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் சுமார் 120 ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் கிழக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் தங்களது வலயங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வலயக் கல்விப் பணிப்பாளர், ஆரம்பக் கல்வி உத்தியோகஸ்த்தர்களுடன் இணைந்து வழங்கவுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.