வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்களுடன் வந்த நந்தன் வேலுப்பிள்ளை என்பவரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி


மட்டக்களப்பு வந்தாறுமூலையில்  ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கச் சென்றவேளை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலட்சுமனன் தேவப்பிரதீபன் (நாராயணன்) என்ற ஊடகவியலாளரே இன்று காலை (26) தாக்குதலுக்குள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் விபத்தொன்றில் உயிரிழந்த சமூகசேவையாளர் அமரர் க.பாஸ்கரன் என்பவரது பெயரில் உறவினர்களால் ஞாபகார்த்தமாக 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 'பேருந்து தரிப்பிடம்' கட்டப்பட்டு உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்குட்பட்டிருந்தனர்;.

இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். கே.துரைராஜசிங்கம் செங்கலடி பிரதேச சபை,இலங்கை போக்குவரத்து சபை ,வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகிய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க மட்டக்களப்பு பணிப்பாளர் வசந்தராஜா ஆகியோர்கள் வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.

இவ்வாறான வரலாற்று பின்னனியினைக் கொண்ட இக் கட்டடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு (24.2.2022) இராஜங்க அமைச்சரின் ஊடக இணைப்பாளர் (சா.ஜசோ). மற்றும் சதமதன் ஆதரவாளர்களினால் பாரிய இயந்திரத்தின் உதவியுடன் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.வெளியூர் சென்றிருந்த உறவினர்கள் ஊர்வந்து பார்த்தபோது பேருந்து தரிப்பிட நினைவு கட்டடம் குறித்த இடத்தில் காணப்படாமை அறிந்து கவலையடைந்து மனவேதனையடைந்துள்ளனர்.

குறித்த நடவடிக்கைக்கு எதிராக நியாயம் கேட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தவர்களை அவிடத்திற்கு வருகை தந்த அமைச்சரின் மேற்படி நபர்கள் கலந்துரையாடல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் போராட்டம் நடைபெறாதவகையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.இவ்வேளை ஊடகவியலாளர்களும் பிரசன்னமாயிருந்தனர்.இதன்போது   ஊடகவியாலாளர் குறித்த சம்பவத்தை வீடியோ எடுக்க தமது கமராவை தயாரனபோது அங்கிருந்த நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

'எல்லாத்திற்கும் காரணம் நீதான்டா' என்று கூறி சரமாரியாக தாக்கியதுடன் அச்சுறுத்தலையும் விடுத்தார்.பின்னர் இவர் பற்றி அறிந்தபோது மொட்டு கட்சி ஆதரவாளரும்,இராஜங்க அமைச்சரின் ஆதரவாளரும்,கிழக்கு பல்கலைகழகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகஸ்த்தர் வே.நந்தன் என கூறப்பட்டது. அத்துடன் குறித்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த நபர் ஒருவரையும் துரத்தி துரத்தி தாக்கியதுடன் ஏனைய ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டார்.

இதனால் சக ஊடகவியலாளர்கள் புகைப்டக்கருவியினை பயன்படுத்தி செய்தி சேகரிக்க முடியாத அச்ச சூழ்நிலை காணப்பட்டதாக தெரிவித்தனர்.தொடர்ச்சியாக இலங்கையில் ஊடக சுதந்திரமும் ஊடகவியலாளர் சுதந்திரமும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றமை குறிப்படத்தக்கது.