மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன் என்கின்றார் பிரதமர் ரணில் !


நாட்டில் ஒவ்வொரு குடும்பங்களிற்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் எதிர்ப்புகளை தணிக்கும் முயற்சியாக ஆறாவது முறையாகும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

பதவியேற்ற பின்னர் சர்வதேச ஊடகமான பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

மேலும் நிதி உதவிக்காக உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்த அவர், இனிமேல் உணவு நெருக்கடி இலங்கையில் இருக்காது என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவை ராஜினாமா செய்யுமாறு கோரி போராடிவரும் போராட்டக்காரர்களின் மனநிலையை புரிந்துகொள்வதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இருப்பினும் குற்றம் சாட்டுவது செயலுக்கு வழிவகுக்காது என்றும் ஜனாதிபதி இராஜினாமா செய்யமாட்டார் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.