வகுப்புக்குச் சென்ற மாணவர்கள் காட்டிலிருந்து பிடிப்பட்டனர்


பதுளை நகரில் பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் சில மாணவர்கள், போதைப் பொருள்களைத் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு, பதுளை தொகுதிக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை போதைப் பொருள் பயன்படுத்திய உயர்தர மாணவர்கள் 15 பேர், மெதிரிய வனப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் பதுளை மற்றும் ஹாலிஎல பிரதேசங்களிலுள்ள பிரபல பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களுள் சில மாணவர்கள் பதுளையில் விடுதிகளில் தங்கி படிக்கும் பிபிலை மற்றும் தெஹியத்தகண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்த தினமே பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களுக்கு எவ்வாறு போதைப் பொருள் கிடைத்தது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரின் பொறுப்பிலிருந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோரிடம் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.