சவர்க்கார நுரையுடன் விளையாடிய சிறுமியை ஆத்திரமுற்று கூரிய ஆயுதத்தால் தாக்கிய தாய்!


இரண்டு தங்கைகளுடன் சேர்ந்து சவர்க்கார நுரையுடன் விளையாடிய மூத்த மகளின் தலை மற்றும் கையில் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய தாய்க்கான தண்டனையை சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய வேளையிலேயே நீதிபதி இக்கேள்வியை எழுப்பினார்.

பிள்ளைகளை தேவதைகளாகக் கருதுவது நமது சமூகம் ஆகும். இவ்வாறான நிலையில் குறித்து இப்பெண் தனது முதல் கணவனுக்குப் பிறந்த 10 வயது சிறுமியை கத்தியால் வெட்டியுள்ளார். இச்செயலானது மோசமான குற்றம் எனக் கூறிய நீதிபதி, அக்குற்றத்துக்கு தண்டனையளிக்க வேண்டும் என்றாலும், அவருக்கு தண்டனை வழங்கினால் இளம் சிறுமியர் இருவர் பாதுகாப்பற்றவர்களாகி விடுவார்கள் எனக் குறிப்பிட்டு அப்பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்கினார்.

அப்பெண் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டதால் கெசல்வத்தை பொலிஸ் பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான அப்பெண்ணுக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு இளம் வயதான தனது மகளை கத்தியால் காயப்படுத்திய பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தி இருந்தார். இந்த வழக்கில் குற்றச்சாட்டை பிரதிவாதிக்கு கூறிய சந்தர்ப்பத்தில் அவர் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதாக நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

வழக்கு தொடர்பாக சட்டமாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அங்கு தெரிவிக்ைகயில், குற்றம் சாட்டப்பட்டவர் இரண்டு திருமணங்களைப் புரிந்தவர் என்றும் முதல் திருமணத்தின் போது அவருக்கு 10 வயதான மகள் ஒருவர் இருக்கின்றார் என்றும் பின்னர் செய்து கொண்ட விவாகத்தில் இன்னும் இரண்டு சிறுமிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மூன்று பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது உடைகளைக் கழுவிக் கொண்டிருக்கும் போது 10 வயதான அச்சிறுமி தனது இரண்டு தங்கைமாருடன் சவர்க்கார நுரை கொண்டு விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அதனால் கோபம் அடைந்த தாயார் அச்சிறுமியை கையிலிருந்த கத்தியால் தலையிலும் கையிலும் தாக்கியதாகவும், மேற்படி செயலை குரூரமான செயலாகக் கருதி அப்பெண்ணுக்கு கடும் தண்டனை விதிக்குமாறும் சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.

பிரதிவாதி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் வாதங்களை முன்வைக்கும் போது, மனநிலை பாதிப்பு காரணமாக தனது கட்சிக்காரர் இவ்வாறு செயற்பட நேர்ந்ததாகவும், அப்பெண் மேலும் இரண்டு சிறுமிகளின் தாய் என்பதால் அவருக்கு கடுமையான தண்டனை விதித்தால் பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களாகி விடுவார்கள் எனவும் எடுத்துரைத்தார். எனவே அப்பெண்ணுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.

அங்கு முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட நீதிபதி, சவர்க்கார நுரையுடன் சிறுவர், சிறுமிகள் விளையாடுவது என்பது சாதாரண நிகழ்வு என்றும் அவ்வாறு விளையாடும் பிள்ளைகளை எந்தத் தாயார் கத்தியால் வெட்டுவார் ? எனவும் வினவினார்.

இவ்வாறு தன்னுடைய 10 வயது மகளை கத்தியால் அப்பெண் வெட்டியது மோசமான குற்றம் என்று குறிப்பிட்ட நீதிபதி, இவ்வாறான பெண்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டியிருந்தாலும் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கினால் பிள்ளைகளான சிறுமிகள் பாதிப்படைவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதன் பிரகாரம் பிரதிவாதிக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் 20, 000 ரூபா அபராதமும் விதித்தார்.

பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் வங்கிக் கணக்கில் 75,000 ரூபா நஷ்ட ஈட்டை வைப்பிலிடுமாறும் பிரதிவாதியான தாய்க்கு உத்தரவிட்ட நீதிபதி, அபராதம் மற்றும் நஷ்ட ஈட்டை வழங்காவிட்டால் மேலும் ஒன்றரை வருட சிறைத் தண்டனை விதிக்கப்படுமெனவும் தீர்ப்பளித்தார்.