களனி துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியானது


களனி – பட்டிய சந்தியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மினுவாங்கொடையைச் சேர்ந்த 32 வயதுடைய முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் தமது மனைவி மற்றும் 2 வயதுடைய ஆண் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் 2 வயது குழந்தையும், அந்த வீதியூடாக பயணித்த மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், 2 வயது குழந்தை பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, பாதாள குழுவொன்றுடன் தொடர்பிணை பேணியிருந்த நிலையில், அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், நீண்ட காலமாக இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகளே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.