பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இளைஞன் வீட்டினுள் சடலமாக மீட்பு


காத்தான்குடியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

காத்தான்குடி 03, ஹுதா வீதியில் வசிக்கும் 23 வயதுடைய பதுர்தீன் சுபைக் அகமட் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த இளைஞன் தூக்கத்துக்கு சென்றவர் நேற்று (22) தூக்கத்திலிருந்து எழும்பாத நிலையில், அவர் மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

இதையடுத்து உறவினர்கள் காத்தான்குடி பொலிசாருக்கு அறிவித்துள்ளதோடு, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம். ரஹீம் தலைமையில் சென்ற பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து காத்தான்குடி பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போலின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து குறித்த வீட்டுக்கு சென்ற நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞன் 40 தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுதலையாகி இருந்தார் எனவும் தெரிய வருகிறது.