அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவ நோக்கத்திற்காக சீனா பயன்படுத்த அனுமதிக்கப்படாது : ஜனாதிபதி!


அம்பாந்தோட்டையின் தெற்கு துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யோமியுரி ஷிம்பன் எனும் ஜப்பானிய பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு கடனுக்கான மாற்றாக பெய்ஜிங் 99 வருட குத்தகைக்கு எடுத்துக்கொண்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தில் செவ்வாயன்று வந்த உயர்தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலின் வருகைக்கு முன்னதாக இந்தப் பேட்டி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் ஒரு பகுதியாக அம்பாந்தோட்டை துறைமுகம் உருவாக்கப்பட்டது, ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் 2017 இல் துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது .
துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இது ஒன்றும் புதிதல்ல. அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் துறைமுகங்களை குத்தகைக்கு எடுத்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தோ-பசிபிக் பகுதியில் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவ தளமாக மாறக்கூடும் என்று இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் கவலை கொண்டுள்ளன. எனினும் தற்போது வந்துள்ள கப்பல் இராணுவப் பிரிவின் கீழ் வரவில்லை. [இது] ஒரு ஆராய்ச்சிக் கப்பல் என்ற அடிப்படியில் வந்தது. அதனால்தான் தான் கப்பலை அம்பாந்தோட்டைக்கு வர அனுமதித்தோம் என்று விக்கிரமசிங்க கூறியுள்ளார் .