மண்ணெண்ணெய் விலையில் திருத்தம்!


எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெண்ணெய் முறையாக விநியோகிக்கப்படும் என்றும், விலையை 87 ரூபாவிலிருந்து மாற்றியமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதால், மண்ணெண்ணெய் விலையும் திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் கடற்தொழிலாளர்கள்,குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் பாதித்துள்ளனர். ஒருசில பகுதிகளில் கடற்றொழிலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றார்.

பாராளுமன்றம் நேற்று (10) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இதேவேளை மசகு எண்ணெய் கப்பல் எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. அவ்வாறான நிலைமையில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 15ஆம் திகதி திறக்கப்பட்டு 19ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் முன்னெடுக்கப்படும் என்றார்.

கடற்தொழிலாளர்கள்,குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது. ஒரு சில பஸ் உரிமையாளர்கள் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெயை பயன்படுத்துகிறார்கள். எனவே, எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலை திருத்தம் செய்யப்படும் என்றார்.