கனடாவும் இலங்கையும் தன்னார்வ ஒத்துழைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன


WUSC தன்னார்வ ஒத்துழைப்புத் திட்டத்தை 2020-2027 நடைமுறைப்படுத்துவதற்காக கனடாவும் இலங்கையும் 2022 ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் மற்றும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகையில்,   மெக்கின்னன், “இந்த வேலைத்திட்டம் இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதுடன் எமது இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவுகளை வளர்க்கும். IGNI+E ஆனது பெறுமதிவாய்ந்த தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதுடன் கனேடிய மற்றும் இலங்கை பங்கேற்பாளர்களுக்கு இடையில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கும்” என்று குறிப்பிட்டார்.

குளோபல் எஃபயார்ஸ் கனடா (Global Affairs Canada) அமைப்பின் நிதியுதவியுடனான, உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்திற்கான புத்தாக்கமிக்க உலகளாவிய வலையமைப்பு (Innovative Global Networks for Inclusion & Equality (IGNI+E) திட்டமானது இலங்கை உட்பட ஒன்பது நாடுகளில் பரவியுள்ள ஒரு தன்னார்வத் திட்டமாகும். 

இந்த ஏழாண்டு முன்னெடுப்பானது (2020-2027) கனடாவின் உலக பல்கலைக்கழக சேவையால் (WUSC) நடைமுறைப்படுத்தப்படுகிறது. வறிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட இளைஞர்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு, நிலையான, புத்தாக்கமிகுந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வகையில், முன்னெடுப்புகளைச் செயல்படுத்தவும், சேவைகளை வழங்கவும் உள்ளூர் பங்காளிகளுக்கு இது உதவும். வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான கனடாவின் நிலையான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, இலங்கையின் அபிவிருத்தியில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பங்களிப்பை WUSC வழங்கி வருகின்றது. இலங்கையில் IGNI+E திட்டமானது, தகுதிவாய்ந்த கனேடிய தன்னார்வலர்களின் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை ஈடுபடுத்தி பயன்படுத்துவதன் மூலம், அரச, அரச சார்பற்ற, தனியார் மற்றும் சமூக நிறுவனத் துறைகளுக்கு ஆதரவளிக்கும். இந்தத் திட்டத்தில் உள்ளூர் பங்காளிகளுக்கு ஆதரவளிக்க பதினெட்டு இலங்கை தன்னார்வலர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இலங்கையின் தன்னார்வலர்களில் இருவர் கனடாவில் பசுமை தொழில்முனைவு மற்றும் பாலின அடிப்படையிலான முதலீடு தொடர்பான செயலமர்வில் பங்கேற்கவுள்ளனர். 

அவர்களின் விஜயத்தில் சிந்தனையாளர்களுடனான சந்திப்புகள் மற்றும் கனடாவில் காலநிலை முன்னெடுப்புகளில் பணிபுரியும் பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் வணிக காப்பகங்கள்/முடுக்கிகள் பற்றிய அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளல் ஆகியன அடங்கும்.
- High Commission of Canada -