பாராளுமன்ற நேர அட்டவணையில் மாற்றம் !



பாராளுமன்றத்தை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மு.ப 9.30 மணிக்கு ஆரம்பிக்கவும், மதிய பேசான இடைவேளையை பி.ப 12.30 மணி முதல் பி.ப 1.00 மணிவரை அரை மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய பாராளுமன்றம் எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் கூடவிருப்பதுடன், எதிர்க்கட்சி கொண்டுவரும் மின்சாரக் கட்டண அதிகரிப்புத் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை அன்று மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லையாயின் அச்சட்டமூலம் குறித்த விவாதத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 30, 31, செப்டெம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகளில் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.