போராட்டத்தின் மூலமே ஊழலை நிறுத்த முடியும் – சரத் பொன்சேகா !


நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட்டைச் சிதைக்கச் செய்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மெழுகுவர்த்தியில் இருந்து வானொலி, தொலைக்காட்சி என ஒவ்வொரு பொருளின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஐஎம்எப் என்று மட்டும் சொல்கிறதே ஒழிய, மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசிடம் தீர்வு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும்போது மக்கள் வீட்டில் தங்கி கதவுகளைத் திறக்க முடியாது எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கரிம உரக் கொள்கையினால் விவசாயியும் நாட்டின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்துவிட்டது என்று கூறிய அவர், கோட்டாபய ராஜபக்ஷவும் கரிமக் கொள்கையினால்தான் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

அப்படி இருந்தும் சில மக்கள் பிரதிநிதிகள் வெட்கமின்றி இன்னும் இயற்கை உரம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

இவ்வாறான நெருக்கடிகள் அனைத்திற்கும் காரணம் ஊழல் அரசியல் கலாசாரத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வந்த ஊழல் அரசியல்வாதிகள் எனவும் இவ்வாறான ஊழல் அரசியல்வாதிகள் ஐம்பது வீதமானவர்கள் இருப்பதாகவும் பீல்ட் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற மீண்டும் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அந்த ஊழல் அரசியல்வாதிகளை வாக்கு மூலம் வீட்டுக்கு அனுப்ப முடியாது என்றும் ஊழல் அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு மட்டுமே பயப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.