100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பம் !

FAROOK SIHAN




வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பமானது.

இன்று(8) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கடற்கரை பகுதியிலுள்ள பிரதேச பூங்கா அருகில் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு வேண்டி இந்நிகழ்வானது வட - கிழக்கின் எட்டு மாவட்டத்திலும் இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் என்ற 100 நாள் செயலமர்வு வடக்கு கிழக்கு ஒருங்கணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.அதன் இறுதி நாளான இன்று வடக்கு கிழக்கு தழுவி இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

இதன் போதுஇ பொதுச் சுடர் ஏற்றப்பட்டு 100 நாள் செயல்முனைவின் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துக எனும் தொனிப்பொருளில் பாதாகையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த இறுதி நாள் நிகழ்வில் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உட்பட முக்கிய அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.