உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 4,000க்கும் மேற்பட்ட அதிபர்கள் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் : கல்வி அமைச்சர் !



அதிபர் ஆட்சேர்ப்பு இடைநிறுத்தப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் நீக்கியதை அடுத்து, 4,000 அதிபர்கள் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் 12,000 அதிபர்கள் உள்ள போதிலும் பாடசாலை அமைப்பிற்கு 16,000 அதிபர்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்ட 26,000 அரச ஊழியர்கள் 2023 ஜனவரி முதல் ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படுவார்கள்.  இதன்படி, 2018, 2019, 2020, 2021 ஆகிய வருடங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகள் மாகாணம் முழுவதிலும் பொதுப் பரீட்சையின் பின்னர் உள்வாங்கப்பட்டு இந்த ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்படும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படும் நிதியில் பாடசாலைகளின் பௌதீக வளங்களை பூர்த்தி செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நிர்வாக சீர்திருத்தங்கள் வரும் ஜனவரி மாதத்திற்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி கல்வி வலயங்களின் எண்ணிக்கை 100 இல் இருந்து 120 ஆக அதிகரிக்கப்படும். பாடசாலைகளின் பௌதீக வளங்களை பூர்த்தி செய்வதற்கு தேவையான நிதியை கல்வி அமைச்சு ஏற்கனவே கோரியுள்ளது.

யுனிசெப் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வெளிநாட்டு உதவிகளும் அடுத்த வருடத்திற்குள் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த நிதியை பாடசாலைகளின் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.