பணம் இல்லாததால் 53 நாட்களாக கடலில் கச்சா எண்ணெய் கப்பல் !


சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்டு இறக்கப்படாமல் கொழும்பு வெளி துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்ட கச்சா எண்ணெய் கப்பல் இன்று (நவம்பர் 11) 53 நாட்களை நிறைவு செய்துள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்த வருடத்தில் 53 வருடங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும், பல வருடங்களாக கச்சா எண்ணெய் கப்பல் தரையிறங்காமல் இருப்பது இதுவே முதல் முறை எனவும் தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தக் கப்பலுக்கான தாமதக் கட்டணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே எழுபத்தொன்பது இலட்சத்துக்கும் அதிகமான டொலர்களை மேலதிகப் பணமாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் எண்ணெய் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு நிலையம் ஒரு மாதத்திற்கு முன் மூடப்பட்ட நிலையிலேயே இந்த கச்சா எண்ணெய் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.

இந்தக் கப்பலில் எக்போ என்ற ரஷ்ய நிறுவனத்துக்குச் சொந்தமான 99,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் உள்ளது, அது செப்டம்பர் 20 அன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.