ஆறு மாதத்திற்குள் 691 பில்லியன் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது : முன்னாள் ஆளுநர் !


சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலைக்குரியதாகும். 2.9 பில்லியன் நிதி பெறுவதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எடுப்பது எதிர்வரும் மார்ச் மாதம் வரை தாமதமாகும்.

நிறைவடைந்த ஆறு மாதத்திற்குள்; 691 பில்லியன் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியதாக குற்றச்சாட்டியவர்கள் இன்று பொருளாதாரத்தை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளார்கள்.கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் போது நாட்டை தொடர்ந்து முடக்கினால் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை பலமுறை அறிவித்தேன்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக நாட்டை முடக்குமாறு பல்வேறு முறைகளில் அழுத்தம் பிரயோகித்தவர்கள் தற்போது அதனை மறந்து விட்டு அனைத்து பழிகளையும் எம்மீது சுமத்துகிறார்கள்.அரசியல் நோக்கம்,பொருளாதாரத்தில் அழுத்தம் செலுத்தினால் அதன் விளைவு பாரதூரமான அமையும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் நிதியை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் நடுத்தர மக்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்க்கொள்வார்கள் என்பதை ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு அமைய வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பன்மடங்கு வரி அதிகரிக்கப்படும்.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.

மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என அறிவித்தார்.பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமுறை கடன்களை மீள செலுத்த போவதில்லை எனவும் அறிவித்ததால் கடன் மற்றும் நிதியுதவி வழங்குவதற்கு தயாராக இருந்த நாடுகள் கடன் வழங்க முன்வரவில்லை.

2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்றேன்.பதவி வகித்த 203 நாட்களில் 446 பில்லியன் நாணயம் அச்சிடப்பட்டது. பணவீக்கம் 18 சதவீதமாக காணப்பட்;டது.மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்நலால் வீரசிங்க பதவியேற்று 207 நாட்களுக்குள் 691 பில்லியன் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது,பணவீக்கம் 66சதவீதமாக உயர்வடைந்துள்ளது. நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எதிர்வரும் மாதம் எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ள போதும்,கடன் மறுசீரமைப்பு அதற்கு பிரதான தடையாக உள்ளது.வங்குரோத்து நிலையை அறிவித்துள்ள பின்னணியில் கடன் மறுசீரமைப்பிற்கு பிரதான கடன் வழங்குநர்கள் இணக்கம் தெரிவிப்பதை தாமதப்படுத்தி வருகிறார்கள்.இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை அடைவது எதிர்வரும் மார்ச் மாதம் வரை தாமதமாகும்.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை தவிர்த்து அரசாங்கத்திடம் பிற திட்டங்கள் ஏதும் கிடையாது என தெரிவித்தார்.