அரசாங்கத்துக்கு நெருக்கமான சிலர் வெளிநாடுகளில் இருந்து முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய முயற்சி : தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் !



அரசாங்கத்துக்கு நெருக்கமான சிலர் வெளிநாடுகளில் இருந்து முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய முயற்சிப்பதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்குத் தேவையான முழு அளவிலான முட்டை மற்றும் கோழி இறைச்சி கடந்த காலங்களில் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், தற்போது நிலவும் கால்நடைத் தீவன நெருக்கடி காரணமாக இரண்டு தொழில்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அதன் அழைப்பாளர் சஞ்சீவ தம்மிக்க சுட்டிக்காட்டுகிறார்.

தற்போதுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு 48 ரூபாவாக அதிகரித்துள்ளதால், அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் முட்டைகளை வழங்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலைமையால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அத்தொழில்களைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.