குழந்தை மீது தாக்குதல் ; மனைவிக்கு மரண அறிவித்தல் போஸ்டர் ; கணவனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு !




ஊர்காவற்துறையில் 3 வயதுப் பச்சிளம் குழந்தை மீது தந்தை கொடூரமாக தாக்கியதோடு, மனைவிக்கு மரண அறிவித்தல் போஸ்டர் அடித்து வட்ஸ் அப்பில் பகிர்ந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த பெண்ணினை விட்டுவிட்டு சென்றுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் இடையே தொடர்புகள் எவையும் இருந்ததில்லை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வந்த தந்தை, சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி, தாயையும், மகளையும் சுருவில் பகுதிக்கு அழைத்துச் சென்று 5 நாட்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த 4 ஆம் திகதி அடிபாடு சம்பந்தமான வழக்கு ஒன்றிற்காக ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்துள்ளார்.

பின்னர் அவர், கடந்த 4ம் திகதி, வாய் பேச முடியாதவர்களது சமூக ஊடக குழுமம் (வாட்ஸப்) ஒன்றில் தனது மகளை தாக்கும் காணொளியை வெளியிட்டிருந்தார். அத்துடன் தனது மனைவியும், குறித்த குழந்தையின் தாயுமான பெண்ணின் மரண அறிவித்தல் போஸ்டர் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளியும், மரண அறிவித்தல் போஸ்டரும் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்த நிலையில் அது ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் எட்டியது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த காணொளியையும், மரண அறிவித்தல் போஸ்டரையும் ஊர்காவற்துறை நீதிவானுக்கும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு, ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டார். எனினும் அந்த பெண் இறந்துவிட்டாரா அல்லது உயிரோடு இருக்கிறாரா, அவர்கள் இருக்கும் இடம் எங்கு என்ற எந்த விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை.