தனியார் துறை ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டத்தை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிவு !



தனியார் துறை ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இந்த யோசனையை முன்வைத்தார்.

தனியார் துறையில் பணிபுரியும் போது பல்வேறு காரணங்களால் வேலையிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இது மிகவும் சிக்கலான சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அங்கு, ஒரு காப்புறுதிக் கொள்கையை வழங்குவதற்கும், வேலை இழக்கும் வரையிலான காலத்துக்கு காப்புறுதி நிதியை நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டதுடன் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு வரையறுக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படலாம்.

மேலும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் ஏராளமானோர் நிவாரணம் பெறுவார்கள் என்றும், தனியார் துறை ஊழியர்களுக்கும் இதுபோன்ற மருத்துவக் காப்புறுதி வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, உத்தேச சுகாதார மற்றும் காப்புறுதித் திட்டங்களுக்காக ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து சில தொகைகளை ஒதுக்குவது பொருத்தமானது எனத் தெரிவித்தார்.

இதன்படி, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் கீழ் இந்த இரண்டு புதிய முறைகளையும் உள்ளடக்கும் வகையில் ஊழியர் நம்பிக்கை நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.