நாட்டை அழித்தவர்கள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என கூக்குரல் இடுகின்றனர் : சாணக்கியன் !


நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியாது. நாட்டை அழித்தவர்கள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என கூக்குரல் இடுகின்றனர். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், பின்வருமாறு தனது கருத்துக்களை வெளியிட்டார். இலங்கை முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளைப் பார்க்கின்ற போது பொருளாதார பிரச்சினைகளுக்கு மூல காரணமாக கடந்த பல வருட காலமாக இடம்பெற்றுள்ள பிரச்சினைகளை கூறலாம். இப் பொருளாதார பிரச்சினைகளுக்கு 1948 இலிருந்து ஆட்சி புரிந்த அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேஷன் அவர்கள் இந்திய வம்சாவழியினர் ஆற்றிய பாரிய பணிகளாக துறைமுகமமைத்தல், தேயிலைக் கைத்தொழில் வளர்ச்சிக்கு உதவியமை போன்றவற்றைக் குறிப்பிட்டார். 

D.S. சேனநாயக்க அவர்கள் இந்திய வம்சாவழியினரின் குடியுரிமயினைப் பறித்தார். இலங்கைப் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவது ஆடைக் கைத்தொழிலாக இருக்கின்ற போதிலும் தேயிலையின் ஊடாகவே அதிக ஏற்றுமதியை நாம் பெறுகின்றோம். இவ்வாறு 1948 இலிருந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவிய தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாம் என்ன உதவிகளை செய்துள்ளோம்? என தனது உரையில் கேள்விகளை எழுப்பினார். மேலும் இந்திய தமிழர்களை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சியே தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பின் ஒரு பகுதியாகவே அம்பாறை காணப்பட்டது. ஆனால் தற்போது ஒரு மாவட்டமாக உருவாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் காணியில்லாத அநேகர் இருந்தனர். எந்த இனத்தவருக்கும் காணி வழங்கப்படாத போது வேறு இடங்களிலிருந்து மக்களை கொண்டு வந்து அம்பாறை மாவட்டத்தில் குடியமர்த்தினர். நான் 500 இளைஞர்களை மாத்தறைக்கு அழைத்து சென்று காணி வழங்க முனைந்தால் மாத்தறை இளைஞர்கள் விரும்புவார்களா? இதற்கு உடன்படுவார்களா? இன்று பொருளாதார பிரச்சினையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள மக்களுக்கு உண்மையை கூறுங்கள். “நாட்டை அழித்தது அரசியல்வாதிகள் தான்” என. தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காது தடையாக இருப்பது யார்? என நீங்களே கூறுங்கள் என இரா சாணக்கியன் அவர்கள் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.

மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; இங்கு வரிச்சலுகை பற்றி பேசப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் வருகின்ற காலம் தடையை ஏற்படுத்த வேண்டாமென கூறினர். சுற்றுலாப்பயணிகளால் மாத்திரம் தற்போதைய நெருக்கடி நிலையை சீர் செய்ய முடியாது. 1948 தொடக்கம் தற்போது வரை நீடித்து வருகின்ற தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்க்காது விட்டால் இந்த நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டினை ஆண்டனர். சுதந்திரத்தின் பின்னர் பண்டாராநாயக்கா சிங்கள தனிச்சட்டத்தினை கொண்டு வந்தார். சிவில் நிர்வாக முறைமை கொண்டுவரப்பட்டமையால் தமிழர்கள் வேலைவாய்ப்பினை இழந்தனர் என கருத்து வெளியிட்டார்.

மேலும் அவர்; யாழ் மாவட்டத்திலும், மொனராகலை மாவட்டத்திலும் ஒரே புள்ளிகளை பெறுகின்ற மாணவர்களில் மொனராகலை மாவட்ட மாணவர் பல்கலைக்கழகத்திற்கு செல்ல தகுதியுடையவராகின்றார். ஆனால் யாழ் மாவட்ட மாணவர் அனுமதி நிராகரிக்கப்படுகின்றார். இங்கு அநீதியே இழைக்கப்படுகின்றது. அம்பாறை, கேகாலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமென்பதற்காக யாழில் பல்கலைக்கழகம் தெரிவான மாணவரின் வாய்ப்பினை பறிப்பது நியாயமானதா? என்ற கேள்விகளும் இரா. சாணக்கியன் அவர்களால் எழுப்பப்பட்டது.

இலங்கையை அழித்தவர்கள் தான் தற்போது பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமென கூக்குரலிடுகின்றனர். நீண்ட காலமாக தீர்க்கப்படாத தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது விட்டால் இந் நாட்டின் பிரச்சினையை தீர்க்க முடியாது. முன்னைய அரசாங்கம் சர்வதேசத்திற்கு பல வாக்குறுதிகளை அளித்தது. அதிலொன்று “யுத்தத்தினை முடித்துக் கொள்ளுங்கள் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குகின்றோம்” என்பதாகும். 2012 வரை இந்த வாக்குறுதி தொடர்பில் ஆர்வம் காட்டப்படவில்லை. ஆகவே தான் இப் பிரச்சினை மனித உரிமை ஆணையகத்திற்கு சென்றது. இரா. சாணக்கியன் அவர்கள் சிங்கள உறுப்பினர்களிடம் தமிழ் கைதிகளை விடுவிக்கும் படி பரிந்துரை செய்யுமாறு கேட்கின்றேன். அவ்வாறு செய்வீர்களா? எனக் கேட்டார். கைதிகளாக்கப்பட்டவர்களின் உறவுகள் கூறுகின்றனர் இந்த இடத்தில் எனது புதல்வரை, கணவரை கையளித்தேன் என. அந்த தாய்க்கும், மனைவிக்கும் உரிமை இருக்கின்றது தனது புதல்வர், கணவனுக்கு நடந்தவற்றை கேட்பதற்கு. தேர்தலை காலம் தாழ்த்தப்படக் கூடாது. இந்த நாட்டில் அதிகார பரவலாக்கத்திற்கு ஒரு முறையை கொண்டு வாருங்கள். நாட்டை இரண்டாக பிரிக்க கூறவில்லை. ஒரே நாட்டிற்குள் அதிகார பரவலாக்கத்தினை கொண்டுவரும் படியே கூறுகின்றோம்.

கமத்தொழில் அமைச்சின் ஊடக சேதன பசளையை பயன்படுத்த 1ஹெக்டயருக்கு ரூ 20000 வழங்கப்படுகின்றது. 17 கம்பனிகள் சேதன பசளையை பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பில் மாத்திரம் 73000 ஹெக்டயர் பரப்பளவு காணிகள் உள்ளன. ரூ 20000 வழங்குவதென்றால் ரூ 160 மில்லியன் தேவைப்படுகிறது. சேதன பசளையில் ஈர சாணம் மாத்திரமே உள்ளது. இக் கம்பனிகளுக்கு வழங்கும் பணத்தினை பிரதேச சபையின் ஊடக விவசாயிகளுக்கு வழங்குங்கள். மாவட்ட அபிவிருத்தி தலைவர்களிடம் சேதன பசளையினை காண்பிக்குமாறு கூறின் அவர்கள் அவற்றை நிராகரிக்கின்றனர். மாவட்ட அபிவிருத்தி தலைவர்களுக்கும் இந்த கம்பனிகளுக்கும் ஏதோவொரு பிணைப்பு உள்ளது. அவர்களுக்கும் இப் பணத்திலிருந்து செல்கின்றது போலும். பண வீக்கம் அதிகரித்துள்ளது. இலங்கைக்கு 15 முதலீட்டாளர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களைக் கொண்டு எமது நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் தனது பாராளுமன்ற உரையின் போது கருத்து வெளியிட்டார்.