அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியம் மற்றும் தேசிய ஒருங்கிணைந்த புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பு நிறுவனங்கள் இணைந்து நடாத்திய சிறுவர் மேம்பாட்டு விழா !



(ஏறாவூர் நிருபர் - நாஸர்)




அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியம் மற்றும் தேசிய ஒருங்கிணைந்த புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பு ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாட்டு செய்த சிறுவர் மேம்பாட்டு விழா மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் மற்றும் கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் ஆகியோர் இவ்விழாவில் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 

சமூக ஊடகங்கள் பாடசாலை மாணவர் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் , போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் சமூக சீரழிவுகள், சிறப்பான கல்வியைப்பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் போன்ற விடயங்களில் விழிப்புணர்வூட்டும் பல்வேறு நாடகங்கள் இங்கு அரங்கேற்றப்பட்டன.

செங்கலடி மத்திய கல்லூரி, கோரகல்லிமடு ரமண ரிஷி வித்தியாலயம், முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஷ்ண வித்தியாலயம் மற்றும் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் நாடகங்களில் பங்கேற்றனர்.

தேசிய ஒருங்கிணைந்த புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பின் தலைவர் முனைவர் எஸ். தில்லைநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்குப்பல்கலைக்கழக பதிவாளர் ஏ. பகிரதன் மற்றும் நிறுவனங்களின் திட்ட இணைப்பாளர்களான விக்னேஸ்வரன் சுதர்ஷன் மற்றும் மருத்துவர்
வீ. சச்சிதானந்தன் ஆகியோரும் விசேட அதிதியாகக் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் கிழக்கு மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் நடாத்தப்பட்ட கல்வி மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் வெற்றியீட்டிய பல மாணவர்கள் இங்கு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.