நாட்டிலுள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் டிஜிட்டல் மயப்படுத்த திட்டம் !



நாட்டிலுள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் டிஜிட்டல் தளத்துடன் இணைப்பது தொடர்பில் தேசிய பேரவையின் உபகுழு கவனம் செலுத்தியுள்ளது.

இதனூடாக பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித் திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு, வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போன்றவற்றால் தாம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், பாடசாலை வேன் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட போக்குவரத்துத் துறையின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி, அவற்றையும் உள்ளடக்கிய முன்மொழிவுகள் குழுவினால் முன்வைக்கப்படும் என உப குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள சகல போக்குவரத்துத் துறைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் கொண்டு வருவது இதன் பிரதான முன்மொழிவாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.