காகத்தின் கூட்டில் முட்டையிட்ட ரணில் என்கிற குயிலால் சரியான கொள்கைளை நடைமுறைப்படுத்த முடியாது : ஹர்ஷ டி சில்வா !


சிக்கியிருக்கும் வலையில் இருந்து மீள முடியாது என்பதும் ஜனாதிபதி ரணில் சமர்ப்பித்த வரவு-செலவு திட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

வரவு- செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கான சம்பளம், மேலதிகக் கொடுப்பனவுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைத்துள்ளார் என்றார்.

காகத்தின் கூட்டில் முட்டையிட்ட ரணில் என்கிற குயிலால் சரியான கொள்கைளை நடைமுறைப்படுத்த முடியாது. அதேபோல் சிக்கியிருக்கும் வலையில் இருந்து மீள முடியாது என்பதும் ஜனாதிபதி ரணில் சமர்ப்பித்த வரவு-செலவு திட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.நாட்டு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும், இலஞ்ச, ஊழல் செயற்பாடுகளை ஒழிக்க வரவு-செலவு திட்டத்தில் ரணில் வாய்திறக்கவில்லை எனவும் குற்றஞ்சுமத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (15) வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு-செலவு திட்டங்களில் நல்ல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் சமூகப் பாதுகாப்பு, நீதி, அரசியல் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஏன் எதனையும் குறிப்பிடவில்லை. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கும்போது நாட்டில் ஏழ்மையின் நிலை 11 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 40 சதவீதமான அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூறுகிறது. நாளொன்றுக்கு தேவைப்படும் 2030 கலரிகளை இந்த ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் எவ்வாறுப் பெற்றுக்கொள்வார்கள்? எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்புத் தரப்பினருக்கு செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனது செலவுகளையும் குறைத்து முன்னுதாரணங்களை நாட்டுக்கு ரணில் வழங்கியிருக்கலாம். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. எதிர்க்காலத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுவதற்குப் வரிசை ஏற்பட்டுள்ளது. நியமிக்கப்பட உள்ள புதிய அமைச்சர்களுக்கு வாகனங்கள், அலுவலகங்கள் வழங்கப்பட வேண்டும். இதனால் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.