பெறுமதி சேர் வரி (VAT) திருத்த சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல : உயர் நீதிமன்றம் !


பெறுமதி சேர் வரி (VAT) திருத்த சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அறிவிக்கப்பட்டது.

மனுக்கள் மீதான விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் சட்டமூலத்தில் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாக சபாநாயகர் அபேவர்தன தெரிவித்தார்.

பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து தமது வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்தது.

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் கடந்த மார்ச்சில் பொது நிதிக்கான குழுவில் நிறைவேற்றப்பட்டது. இந்த வரியை 15% இருந்து 18% ஆக அதிகரிக்க வேண்டும் என்று அதில் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திருத்தம், ஏதேனும் தொற்றுநோய் அல்லது பொது அவசரநிலை ஏற்பட்டால், அரச மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைச்சு வழங்கப்படும் மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் மருந்து நன்கொடைகளுக்கு மட்டுமே பெறுமதிசேர் வரி விலக்கு அளிக்கிறது.

அரசியலமைப்பின் 121 (1) வது பிரிவின் அடிப்படையில் வரி திருத்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என நீதிமன்ற உத்தரவைக் கோரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.