கொரோனா காலப்பகுதியில் 90 வீதமான மாணவர்களின் கல்வி அறிவு பாதிப்பு : கல்வி அமைச்சு!

 கொரோனா தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் நடத்தப்படாமையால் இலங்கையில் குழந்தைகளின் கல்வி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்டுள்ள கணக்கெடுப்பு அறிக்கை தெரியவந்துள்ளது.

குறித்த அறிக்கையின் படி, மூன்றாம் வகுப்பு குழந்தைகளில் சுமார் 90 சதவீதம் பேர் போதிய கல்வியறிவு அல்லது அல்லது எண்களைப் பற்றிய அறிவைப் பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த கொரோனா காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளன கல்வி பாதிப்பு குறித்து கல்வி அமைச்சு அண்மையில் விசேட கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

அதன்படி, 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரையிலான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பிற்கு நாட்டின் ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய ஆயிரத்து 9 பாடசாலைகளில் இருந்து 3 ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், எண்கள் மற்றும் அடிப்படை கணித அறிவு உள்ளிட்ட பல துறைகளில் இவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது, 90 சதவீத மாணவர்கள் போதிய கல்வியறிவு அல்லது எண்கள் பற்றிய அறிவைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், கணக்கெடுப்பில் பங்கேற்ற குழந்தைகளில் 27 சதவீதம் பேர் கேட்கும் திறனைப் பெற்றுள்ளனர். கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் கேட்டல் திறமையில் 73 சதவீத குழந்தைகள் தோல்வியடைந்துள்ளனர்.

பேசும் திறனை எதிர்கொண்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், 80 சதவீத மாணவர்கள்; தோல்வியடைந்துள்ளனர்.

கணக்கெடுப்பில் பங்கேற்ற குழந்தைகளில் 37 சதவீதம் பேர் படிக்கும் திறனையும், 34 சதவீதம் பேர் மட்டுமே எழுதும் திறனையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

குழந்தைகளின் எண் அறிவுத் தேர்வில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சுமார் 7 சதவீத மாணவர்கள் மாத்திரமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.