அக்கரைப்பற்றில் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்ததால் பாரிய சேதம்!

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் இன்று (3) அதிகாலை சில காட்டு யானைகள் உட்புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் வீடுகள் மற்றும் பாடசாலை போன்றவற்றின் சுற்று மதில்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளன. அத்தோடு பயன் தரும் பல மரங்களை முறித்து நாசம் செய்துள்ளன. 

குறிப்பாக, பல தென்னை மற்றும் பழங்களை கொண்ட மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளன.

இவ்வாறு வீடுகள் மற்றும் மரங்களை யானைகள் சேதப்படுத்தி அழிக்கும் காட்சிகள் காணொளிகளாக சில பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளன. 

அதேவேளை மேட்டு நிலப் பயிர்கள் மற்றும் மரம், செடி, கொடிகள் பலவற்றையும் யானைகள் நாசம் செய்துள்ளன. 

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், இரவு வேளைகளில் காட்டு யானைகள்  இப்பிரதேசத்தில் நடமாடுவதால் நாங்கள் தினமும் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகிறோம்.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கு தெரியப்படுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவலையோடு தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டி மக்கள் குடியிருப்புப் பகுதியினை அண்டிய பகுதி நீரேந்து பிரதேசமாகவும், நீர்த்தாவரங்கள் மற்றும் சிறிய பற்றைக்காடுகள் நிறைந்த இடமாகவும் காணப்படுகிறது. 

இப்பகுதியில் பகல் வேளைகளில் தரித்து நிற்கும் காட்டு யானைகள் இரவில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து, பாரிய சேதங்களை ஏற்படுத்தி வருவதோடு, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உயிர் அச்சுறுத்தலை உண்டாக்கி வருகின்றன. 

காட்டு யானைகளின் தாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தி, மக்களதும் இயற்கை வளங்களதும் பாதுகாப்பினை பேணுமாறு உரிய  தரப்பினர் இதனூடாக கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.