முற்றிலும் முடங்கியதா இலங்கை ? ஒரே பார்வையில் .!


அரசாங்கத்தின் செயற்படுகளுக்கும், வரி விதிப்புகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடளாவிய ரீதியில் சுமார் 40 தொழிற்சங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல சேவைகள் முடங்கியதுடன், குறிப்பிட்ட சில தொழிலாளர்களுடன் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாடளாவிய ரீதியில் இன்று என்ன நடக்கின்றது என்பதை ஒரே பார்வையில் நோக்குவோம்….

மின்சார சபை காசாளர் சங்கம்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒத்துழைக்கும் நோக்கில் எந்த தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை என்று மின்சார சபை காசாளர் சங்கம், CEB-GM இற்கு அறிவித்துள்ளது.

எனினும் குறித்த அடையாள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் (CEBEU) மற்றும் CEB ஊழியர் சங்கம் உட்பட மின்சார துறையில் உள்ள பல தொழிற்சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

நீர் வழங்கல்

இதற்கிடையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) ஊழியர்கள் இன்று பராமரிப்புப் பணிகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.

எரிபொருள் விநியோகம்

சாதாரண செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6,600 லீற்றர் கொள்ளளவை கொண்ட 300 இற்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் பவுசர்களை விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக CPC/CPSTL தலைவர் எம்.யு. மொஹமட் உறுதிப்படுத்தினார்

போக்குவரத்து

தொழிற்சங்க போராட்டத்திற்கு மத்தியிலும் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இன்று காலை 8 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தினார்.

மேலும், தனியார் பேருந்துகளும் இன்று சேவையில் ஈடுபடும் அதேவேளை, மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

107 இ.போச. டிப்போக்களும் இன்று காலை 11.00 மணி வரையான நிலவரப் படி வழமையான கால அட்டவணையின்படி இயங்குவதாகவும் 08 தொழிற்சங்கங்களில் ஜே.வி.பி தொழிற்சங்கம் தவிர்ந்த 07 தொழிற்சங்கங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

வங்கிச் சேவைகள்

மக்கள் வங்கியின் 340 கிளைகளில் 272 கிளைகள், இன்று காலை 10.30 மணி வரை 75%க்கும் அதிகமான பணியாளர் வருகையுடன் முழுமையாகச் செயல்படுவதாக மக்கள் வங்கியின் CEO/GM கிளைவ் பொன்சேக்கா உறுதிப்படுத்தினார்.

மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் இலங்கை வங்கி தலைமை அலுவலகம் உட்பட 265 கிளைகளின் அனைத்து பிரிவுகளும் வழமை போன்று இயங்கி வருவதாக இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ரஸல் பொன்சேக்க அறிவித்துள்ளார்.

கல்விச் செயற்பாடுகள்

அரசாங்கத்தின் செயற்படுகளுக்கும், வரி விதிப்புகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைத்து ஆசிரியர், அதிபர்கள் தமது சேவையிலிருந்து விலகியுள்ளனர்.

அத்துடன், சில தனியார் பாடசாலைகளும் இன்றைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் சில பாடசாலைகள் காலியாகின்றன.

பல பாடசாலைகளில் குறைந்த மாணவர் வருகையே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இன்று நடைபெறவிருந்த பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பணிப்புரை விடுக்கப்பட்டது.

மேலும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) மற்றும் கல்வி வல்லுநர்கள் சங்கம் ஆகியவையும் இன்றைய அடையாள வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளன.

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் அகில இலங்கை தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதார நிபுணர்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

GMOA திங்கட்கிழமை தனது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தது, மேற்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய நான்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளின் செயல்பாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது.

அடுத்த நாள் ஏனைய ஐந்து மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தியது.

இதேவேளை, ஆய்வக சேவை ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைகளின் இளநிலை ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தபால்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்க முன்னணி என்பன இன்று அனைத்து தபால் நிலையங்கள், துணை தபால் நிலையங்கள், தலைமை அலுவலகங்கள், பிரதான கட்டுப்பாட்டு அலுவலகங்கள் மற்றும் மத்திய தபால் பரிவர்த்தனை ஆகியவற்றில் 24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையை வலுப்படுத்தியுள்ளன. .

துறைமுகம்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் சுதந்திர தொழிலாளர் சங்கம் (SLPA) மற்றும் அத்துறையுடன் இணைந்த பல தொழிற்சங்கங்களும் இந்த அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்துள்ளன.

கடந்த சில நாட்களாக, துறைமுக ஊழியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனால் துறைமுகங்கள் மற்றும் சுங்கம் மூலம் ஈட்டப்பட்ட வருவாயில் கிட்டத்தட்ட 75% இழப்பு ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.