இன்றைய வேலை நிறுத்தம் வெற்றி! தொழிற்சங்க தலைவர்கள் தெரிவிப்பு!


அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றியடைந்ததாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

துறைமுக சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்துள்ளார் . துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஊழியர்களை கட்டாயப்படுத்த முயற்சித்ததாகவும், ஆனால் அது தோல்வியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் போராட்டத்தால் 100% பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலிங் தெரிவித்துள்ளார்

அதேவேளை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்தவாறு பராமரிப்புப் பிரிவு மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மாத்திரம் இயங்கி வருவதாகவும் ஏனைய அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அகில இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பொதுச்சங்க உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய தொழிற்சங்கங்கள் இன்று பணிக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் அனைத்து தொழிற்சங்க தலைவர்களையும் நேற்று கலந்துரையாடலுக்கு அழைத்ததாகவும், தான் எடுத்த எந்த முடிவையும் திரும்பப் பெறப்போவதில்லை என்று அமைச்சர் கூறியதாகவும் தனது தொழிற்சங்கம் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் ரங்வாலா மேலும் தெரிவித்துள்ளார்.