எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் மாசு விவகாரம் : சட்ட விவகாரத்தில் இழுபறி நிலை!!

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானதால் நாட்டின் சுற்றுச்சுழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், எந்த அடிப்படையில் சிங்கப்பூரில் வழக்கு தொடர முடியும் என சமுத்திர மற்றும் கடற்படை சட்டம் தொடர்பான சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த கப்பல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர இன்னும் 45 நாட்கள் கால அவகாசமே உள்ளமை சுற்றுச்சுழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்தது.

இந்த அனர்த்தம் தொடர்பில் 6.2 பில்லியன் டொலர் இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை சமுத்திர சுற்று சுழல் பாதுகாப்பு அதிகார சபை, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

இதற்கமைய, வழக்கு தொடரும் நடவடிக்கை சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக இடம்பெற வேண்டும் என சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சபையின் தலைவர், சட்டத்தரணி அசேல ருக்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், கப்பல் அனர்த்தத்தினால் நாட்டின் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், மதிப்பீடுகளை மேற்கொண்ட குழு, கப்பலை அண்மித்த பகுதிக்கு செல்லவில்லை என சமுத்திர மற்றும் கடற்படை சட்டங்கள் தொடர்பான சட்டதரணி கலாநிதி டான் மாலிக்க குணசேகர மற்றும் சுற்றாடல் கேந்திர நிலையத்தின் தலைவர் சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், இலங்கையில் வழக்கு தொடர்ந்தால், அதிக நன்மையுள்ளது. இலங்கையின் சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பில் இந்த வழக்கை தொடரவும் விசாரணைக்கு உள்ளாக்கவும் அனைத்து அதிகாரம் உள்ளன.

இவ்வாறான நிலையில், சிங்கப்பூரில் வழக்கு தொடர்வதன் அடிப்படை என்னவென்பது தெரியவில்லை. எனவே, சிங்கப்பூரில் வழக்கு தொடர்வதில் கிடைக்கும் நன்மை என்பதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் கூற வேண்டும்.

குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சிகள் இலங்கையில் உள்ளதுடன், சாட்சியாளர்களும் உள்ளனர். எனவே சாட்சியாளர்களுடன் சாட்சிகளை சிங்கப்பூருக்கு கொண்டு செல்லும்போது அதிக செலவீனம் ஏற்படும்.

தற்போதைய நிலையில், சிங்கப்பூர் சட்டதரணிகளுக்கு 5 மில்லியன் டொலர் செலுத்த வேண்டும். அத்துடன், ஏனைய செலவுகளும் உள்ளன.

எனவே. இந்த அனைத்து செலவுகளையும் நோக்கும் போது, கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்காவிட்டால், இந்த செலவு அனைத்தும் வீணாகும் என சமுத்திர மற்றும் கடற்படை சட்டம் தொடர்பான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.