இலங்கை அரசு அனுமதி வழங்கினால் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயார் : ரஷ்ய தூதுவர்!

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை (Nuclear Power Plant) நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

110 மெகாவாட் அணு மின் உற்பத்தி நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுமாயின், அதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க தமது நாட்டு அதிகாரிகள் தயாராகவுள்ளதாக ரஷ்ய தூதுவர் கூறியுள்ளார்.

இதற்கு தேவையான எந்தவொரு கலந்துரையாடலுக்கும், விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.