ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நாட்டை இன்னும் முன்னேற்ற முடியும் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

ஜனாதிபதிக்கு  ஒத்துழைப்பு வழங்கினால், நாட்டை இன்னும் முன்னேற்ற முடியுமாக இருக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2022 மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை அடுத்தே நாட்டில் வன்முறை இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதற்கு பல மாதங்களுக்கு முன்னரே பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கூட்டங்களின்போது, இவ்வாறான வன்முறை நாட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.

இதுதொடர்பாக புலனாய்வுப் பிரிவினரால் பாதுகாப்புத் தரப்பினருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால்தான் அழிவை நாம் அனைவரும் சந்தித்தோம்.

இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்று நாட்டில் இருந்த பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிராக அமைதியாக போராடிய மக்களால் இந்த வன்முறை மேற்கொள்ளப்படவில்லை. இது திட்டமிடப்பட்ட செயற்பாடாகும். ஒரு குழுவினரால் தான் இது மேற்கொள்ளப்பட்டது.

இவர்களின் பின்னணியில் அரசியல் பலம் உள்ளது. அன்று சமூகங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்த தரப்பினர், இன்று மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனை அப்படியே விட்டால் இனங்களுக்கிடையில் இவ்வாறான தரப்பினரால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.