ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடியே ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்படும் : நீதி அமைச்சர்!


ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அமைப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரேரணைகள் தொடர்பாக ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னரே பொருத்தமான சட்டமூலம் தயாரிக்கப்படும். அதற்காக எதிர்வரும் 7ஆம் திகதி ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அமைப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த ஆணைக்குழு நிறுவுவது தொடர்பில் பிரதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது ஊடக அமைச்சினாலாகும். தற்போது வழங்கப்பட்டிருக்கும் வானொலி அலைவரிசைகள் தொடர்பான அனுமதி பத்திரம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சட்டத்தின் கீழாகும். தொலைக்காட்சி அனுமதிப்பத்திரம் வழங்கி இருப்பது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் விதிகளுக்கமையவாகும்.

அதனால் அனுமதிபத்திரங்கள் வழங்குவதை தரத்துடன் ஒழுங்குபடுத்துவதற்காக முறையொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் தலைவராக நானும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன,அமைச்சர்களான அனுஷ நாணயக்கார, நிமல்சிறிபால டி சில்வா, கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறனர்.

அமைச்சரவை உபகுழுவினால் பல பிரேரணைகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தயாரிக்கப்பட்டிருப்பது பிரேரணைகள் மாத்திரமாகும். இதுதொடர்பாக கலந்துரையாடி பொருத்தமான சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கு இருக்கிறோம். இந்த பிரேரணைகள் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் தங்களின் யோசனைகள் கருத்துக்களை முன்வைக்க முடியும்.

அதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான கலந்துரையாடல் ஒன்றை ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தற்போது தயாரிக்கப்பட்டிருப்பது சட்டமூம் அல்ல. பிரேரணைகள் மாத்திரமான தொடராகும். இதுதொடர்பாக யோசனைகளை வழங்குவதற்கு ஊடக நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் இருக்கிறது என்றார்.