பழச்சாறு கொடுக்க மறுத்த பழக்கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு ; மூவர் கைது!


பழச்சாறு தர மறுத்தவர்கள் மீதே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான நபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த 25ஆம் திகதி யாழ்.நகர் பகுதியில் பழக்கடை ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  கொக்குவில் மற்றும் சுதுமலை பகுதிகளை சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அவர்களின் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் , வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் , முகங்களை மறைத்து கட்டும் கறுப்பு நிற துணிகள் என்பவற்றை மீட்டுள்ளனர். 

கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , தாம் அன்றைய தினம் இரவு கடைக்கு சென்று யூஸ் கேட்ட போது , கடையை பூட்ட ஆயத்தம் ஆகிவிட்டோம். அதனால் யூஸ் தர முடியாது என உரிமையாளர் கூறினார். அதனால் ஆத்திரமுற்ற நாம் , அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவரை பற்றிய தகவல்கள் பெற்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.