என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி : நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் !

மருதங்கேணியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் நடத்திய சந்திப்பிற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்கள் குறித்தும் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும்  தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முழுமையான தகவல்களை வெளியிட்டுள்ளார்

அவர் தெரிவித்துள்ளதாவது

பகல் மூன்று மணியளவில் நானும் எங்கள் கட்சியின் உறுப்பினர்களும் மருதங்கேணி விளையாட்டு மைதானத்திற்கு சென்றிருந்தோம்,விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடன் சந்திப்பை மேற்கொள்வதற்காக அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க சென்றிருந்தோம்.

அந்த சந்திப்பு ஒரு மரத்திற்கு கீழே இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து  நாங்கள் சந்திப்பை மேற்கொண்டிருந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு எங்களிற்கு சந்தேகத்தை கொடுக்கும் விதத்தில் நடந்துகொண்டார்கள்.

என்னுடைய உத்தியோகபூர்வ ரிசேர்ச் உத்தியோகத்தருக்கு அவர்களிடம் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் அவர்களிற்கு அருகில் சென்று அவர்களின் அடையாளங்களை உறுதி செய்யுமாறு கேட்டிருக்கின்றார்.

அவர்கள் தாங்கள் அந்த பாடசாலையில் பரீட்சைகள் இடம்பெறுவதால் தான் வந்ததாக தெரிவித்துள்ளனர் – அவருக்கு சந்தேகம் மேலும் அதிகரித்ததை தொடர்ந்து நீங்கள் எந்த அடிப்படையில் இங்க வந்தனீங்கள்  பள்ளிக்கூடம் என்றால் ஏன் வந்தனீங்கள் என பிரச்சினை பட நான் அந்த இடத்திற்கு சென்று நான் யார் என்பதை அடையாளப்படுத்தி அவர்களின் அடையாளத்தை கேட்டேன்.

அவர்கள் தாங்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சிஐடி என தெரிவித்தனர்- நீங்கள் உத்தியோகபூர்வமாகத்தான் செயற்படுகின்றீர்கள் என்றால் உங்களின் உத்தியோகபூர்வ அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள் என நான் அவர்களிடம் கேட்டேன் அவர்கள் அதனை மறுத்தனர் தாங்கள்  காட்டவேண்டிய தேவையில்லை  நாங்கள் கேட்கவும் முடியாது என தெரிவித்தனர்.

நாங்கள் நடத்திக்கொண்டிருந்த கூட்டத்திற்கு நீங்கள் அனுமதியில்லாமல் வருகின்றீர்கள் என்றால் கட்டாயம் நீங்கள் உங்கள் அனுமதியை உறுதிப்படுத்தவேண்டும் , நாங்கள் கேட்டால் நீங்கள் அதனை செய்யவேண்டும் என நான் தெரிவித்தேன்.

நீங்கள் உத்தியோகத்தை செய்யவந்திருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் உங்கள் அடையாளத்தை நிச்சயமாக உறுதிப்படுத்தவேண்டும் அதுதான் சட்டம் எனவும் நான் தெரிவித்தேன்.

ஆனால் அவர்கள் அதனை மறுத்து கதைக்கமுற்பட்டார்கள்.

நான் நீங்கள் செல்வதற்கு அனுமதிக்க முடியாது இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம் என தெரிவித்தேன்,எங்களிற்கு நீங்கள் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டுள்ளதால் நீங்கள் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என நான் தெரிவித்தேன்,

அவ்வேளை அங்கிருந்த ஒருவர் எனக்கு அடித்துவிட்டு எனது ரிசேர்ச் உத்தியோகத்தருக்கு தலைக்கவசத்தால் அடித்துவிட்டு  அங்கிருந்து ஓடதொடங்கினார்.என்னுடைய சாரதியும் ஏனையவர்களும் அவருக்கு பின்னால் சென்று பிடிக்க முயன்றபோதும் முடியவில்லை அவர் தப்பிவிட்டார்.

இரண்டாவது நபரை அங்கிருந்த அனைவரும் சுற்றிவளைத்தனர்,நாங்கள் அவரின் அடையாள அட்டையை கேட்டவேளை அவர் அதனை காண்பிக்க மறுத்தார் தனக்கு அடையாள அட்டை உள்ளது என்பதை காண்பிக்க ஏதோ ஒன்றை கண்ணிற்கு முன்னாள் காண்பித்தாரே தவிர யார் என்பதை குறிப்பிடுவதற்கு அவர் மறுத்தார்.

அந்த இடத்தில் நான் கதைத்துக்கொண்டிருக்கும்போது மைதானத்திற்கு அங்கால ஒரு வயர் வேலி காணப்பட்டது அதற்கு அங்கால இருந்து இரண்டு நபர்கள் வேலிக்கு அருகில் வந்தனர் அவர்களில் ஒருவர் சீருடையில் காணப்பட்டார் அவரிடம் துப்பாக்கி காணப்பட்டது,மற்றையவர் பொலிஸாரின் விளையாட்டு சீருடையுடன் காணப்பட்டார்.

அவர் இவையெல்லாம் எங்கட ஆட்கள் அவர்களை இப்படி தடுத்துவைத்திருக்க முடியாது உடனடியா அவர்களை விடுங்கள் என்று சத்தம்போட்டார் நான் அப்படி விடமுடியாது நீங்கள் யார் என கேட்க அவர் தூசனத்தில் ஏசதொடங்கினார். நானும் அவரை ஏசி சட்டம் தெரியாட்டி பிரச்சினை படுத்தாத என்று சொல்லி சுற்றிவளைத்து வைத்திருந்தவருடன் கதைக்க தொடங்க அங்கிருந்த அனைவரும் கத்ததொடங்கினார்கள்.

ஏனென்றால் விளையாட்டுசீருடையில் காணப்பட்ட அவர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சுடுவதற்கு தயாராகும் விதத்தில் நடந்துகொண்டுள்ளார்.