களுவாஞ்சிக்குடியில் 15 வயது சிறுமியை காணவில்லை !

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை (15) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகளூர் முதலாம் பிரிவு, நீலகிரி வீதியைச் சேர்ந்த றமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமி, வீட்டில் பெற்றோர் வறுமையில் கஷ்டப்படுவதாகவும், அதனால் அவர்கள் பிள்ளைகளான தங்களை பராமரிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், தன்னை பராமரிக்கக்கூடிய சிங்கள வீடொன்றுக்கு தான் செல்வதாக வெள்ளிக்கிழமை கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமி காணாமல் போன விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரித்தபோது தெரியவருவதாவது:

குறித்த சிறுமியின் தந்தையார் மேசன் தொழிலை செய்து வருவதாகவும், சிறுமியின் மூத்த சகோதரன் திருமணம் முடித்துச் சென்றுள்ளதாகவும், சிறுமியும் அவரது சகோதரர் ஆகிய இருவருமே பெற்றோருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் வறுமை காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவரது தந்தையாரின் தாயான பாட்டியார் மற்றும் உறவினர்கள் மாத்தளையில் வசித்து வருவதாகவும், கடந்த 2 வருடங்களாக சிறுமி தனது பாட்டியாருடன் வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போன குறித்த சிறுமி தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பெரும் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.