களுபோவில வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளின் உயிரிழப்பு : சம்பவம் தொடர்பில் ஆராய குழு!


களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைப்பிரசவப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கெஸ்பேவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹொன்னந்தர சர்வோதய மாவத்தை, கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த அகிலா போனிபஸ் என்பவர் கடந்த 8ஆம் திகதி பிரசவத்துக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் இரட்டைக் குழந்தைகளை அவர் பெற்றெடுத்த நிலையில், குழந்தைகள் குறைமாத குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டன.

அவற்றில் ஒரு ஆண் குழந்தை கடந்த 19ஆம் திகதி உயிரிழந்த நிலையில், சுவாசக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன் பின், மற்ற குழந்தைக்கு பாலூட்ட சென்றபோது அந்தக் குழந்தையும் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்தச் சம்பவங்கள் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் கொஹுவல பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

இது தொடர்பில் களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய தெரிவிக்கையில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம், இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.