வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட 18 பொதுமக்கள் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள பாவற்குடி கிராமத்தில் கடமையிலிருந்த இரு பொலிஸாரை தாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் 18 பேரை இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாவற்குடி சமுர்த்தி வங்கியில் கடமையிலிருந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்த இச்சந்தேக நபர்கள் முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் வங்கியைச் சுற்றித் திரண்ட சுமார் 150-200 பொதுமக்களை கலைப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். வவுணதீவு பொலிஸார் இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை தாண்டியடி நடராசானந்தபுர பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் மர்ம மனிதர்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வரை பிடிக்கச் சென்ற பொதுமக்களை படையினர் தடுத்ததாகவும் இதனால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து பொதுமக்களை படையினர் தடிகளாலும் விக்கெட் பொல்லாலும் மோசமாக தாக்கியதாகவும் தன்னிடம் பொதுமக்கள் முறைப்பாடு செய்ததாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பெண்கள் உட்பட பலர் காயமடைந்தாகவும் இச்சம்பவம் குறித்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர கரவிட்டவிடம் தான் முறைப்பாடு செய்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கூறினார்.