மட்டக்களப்பு ஊறணியில் மற்றொரு பெண் மீதும் தாக்குதல்-தலைமயிரை அறுத்து சென்ற நபர்!

மட்டக்களப்பு ஊறணியில் நேற்று  பிற்பகல் 3மணியளவில் இளம் பெண் ஒருவர் வெள்ளைவானில் வந்தவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்த வேளையில் நேற்று இரவு 8மணியளவில் வீடு ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் 50வயது பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
அப்பெண்ணின் சட்டையை கிழித்து மார்பு பகுதியில் குத்தியதுடன் அவரின் தலைமுடியையும் அறுத்துச்சென்றுள்ளார்.
கையில் சிறிய கூரிய கத்தி ஒன்றை அந்நபர் வைத்திருந்ததாகவும், அக்கத்தியாலேயே தலைமயிரை வெட்டிச்சென்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அபயக்குரல் எழுப்பிய போது அயலில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர் என்றும் அப்போது தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி சிறிலங்கா காவல் நிலையத்தை நோக்கி ஓடிச்சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இரவு வேளை என்பதால் அவரை பின்தொடர்ந்து செல்ல தாம் அஞ்சியதாகவும், அது நிட்சயம் சிறிலங்கா படையினரின் வேலைதான் என்று ஊறணி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அச்சத்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி இருக்கின்றனர். இளைஞர்கள் பொல்லுகள் தடிகள் கத்திகளுடன் காவல் இருப்பதாகவும், அக்கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.